🌺 2028 ஒலிம்பிக்கில் இணையும் புதிய விளையாட்டு
🌺 எதிர்வரும் 2028ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்கில் ஒரு புதிய விளையாட்டு இணையப்போகிறது.அதில் தமிழ்நாடு தான் முன்னிலையில் இருக்கிறது என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி. சர்ஃபிங் எனப்படும் சிறு படகில் துடுப்பிடும் போட்டி தான் அது. இதற்கான பயிற்சி கடந்த பத்தாண்டு காலமாகவே இராமேஸ்வரம் கடற்கரையில் நடந்துகொண்டிருக்கிறது. இதில் பலவகை இருந்தாலும் ஸ்டாண்டப் பெடலிங் எனப்படும் , நின்றபடியே துடுப்பிடுதல்தான் ஒலிம்பிக்கில் இணைந்து கலக்கப் போகிறது. வழக்கமாக கோவளம் போன்ற இடங்களில் நடக்கும் தேசிய அளவிலான ஸ்டாண்டப் பெடலிங் போட்டி தற்போது இராமேஸ்வரத்தில் நடந்து முடிந்திருக்கிறது. கடந்த வருட ஒலிம்பிக்கிலேயே சர்ஃபிங் இருந்தது. இந்த வருடம் அதில் ஸ்டாண்டப் பெட்டிங் வகைமையும் இணையப் போகிறது. ஒலிம்பிக்கில் இந்த விளையாட்டு இணைந்தால் தொடர்ந்து சர்வதேச அளவில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் இது இடம்பெறக்கூடும் . கடந்த 2018 ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சேகர் என்ற தமிழக வீரர் சர்வதேச அளவில் பதினெட்டாம் இடம் பெற்றார். இது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம். இந்தப் போட்டி பற்றி எந்தவிதமான விழிப்புணர்வும் இல்லாத சூழலில் அரசுகள் , தனியார் அமைப்புகள் ஆகியோரின் போதுமான ஸ்பான்சரும் இல்லாமலேயே இந்த அளவு நம்மால் சாதிக்க முடிந்திருக்கிறது என்றால் சரியான முறையில் உற்சாகம் கொடுத்தால் நம் வீரர்கள் பெரிய அளவில் சாதிப்பார்கள் என்கிறார் இந்திய சர்பிங் கூட்டமைப்பின் தலைவர் அருள்வாசு அவர்கள்.இதில் ஸ்பின் ட்ரேஸ் , டெக்னிக்கல் அண்ட் லாங் ரேஸ் என்ற மூன்றுவகை உள்ளன. இதில் ஸ்பின் ட்ரேஸ் என்பது 200 மீட்டர் தூரத்தை வேகமாகக் கடப்பது , டெக்னிக்கல் என்பது அதிரடி திருப்புதல்கள் நிறைந்த போட்டி , லாங் டிஸ்டன்ஸ் என்பது 12 கி.மீ . தூரம் செல்ல வேண்டிய நெடிய போட்டி. இந்த மூன்றிலுமே நம் ஆட்கள் சிறப்பாக பயிற்சிப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.